நாமக்கல், ஜூன் 26: ராஜவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால், 5 ஆயிரம் பேரை திரட்டி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தப்படும் என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கலெக்டர், கொஞ்சம் காலஅவகாசம் கொடுங்கள் என கேட்டுக் கொண்டார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுபாலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி குப்புத்துரை பேசுகையில், `பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ராஜவாய்க்கால் மூலம், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பை நிறுத்தியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வராததால், பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன.
உடனடியாக தண்ணீர் திறக்காவிடில் 5 ஆயிரம் விவசாயிகளை திரட்டி, பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றார். இளம் விவசாயிகள் சங்கத்தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில், ‘400 ஆண்டுகள் பழமையான ராஜவாய்க்கால் மூலம், மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பிருந்தே, விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். காவிரி ஆற்றில் 50க்கும் மேற்பட்ட நீரேற்று பாசனங்கள், முறைகேடாக தண்ணீர் எடுத்து வருகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டு முழுவதும் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, சேலம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதை தற்போது உள்ள அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர்,’ என்றார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் மதுபாலன், இந்த பிரச்னை குறித்து, நீர்வளத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி பேசுகையில், `தற்போது மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு மட்டும் தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் கடைமடை வரை செல்லவேண்டும். இதனால் தான் நீர்வளத்துறை தலைமை பொறியாளரிடம் உத்தரவு பெற்று, ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பதை நிறுத்தியுள்ளோம். ஆண்டு முழுவதும் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எந்த அரசாணையும் இல்லை. விவசாயிகளின் நலனுக்காக தான், ராஜவாய்க்காலில் மாதத்தில் சில நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது,’ என்றார்.
இந்த பதிலை கேட்டு விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். முறைகேடாக தண்ணீர் எடுக்கும் நீரேற்று பாசன சங்கங்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா, கஜா புயல் போன்ற கால கட்டங்களில், மாவட்ட நிர்வாகத்திற்கு நிவாரணப் பொருட்களை ராஜவாய்க்கால் விவசாயிகள் வழங்கி துணை நின்றுள்ளனர். ஆனால் விவசாயிகளை பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது என ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. விவசாயிகள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று, ஒரே நேரத்தில் பேசினர். இதனால் கூட்டத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவியது.இதையடுத்து கலெக்டர் மதுபாலன் பேசுகையில், ‘குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் போராட்ட களம் என நினைக்கக் கூடாது.
டெல்டா மாவட்டங்களுக்கும் குடிநீர் சென்று சேர வேண்டும். அதே நேரம் இங்குள்ள விவசாயிகளும் பாதிக்கப்படக் கூடாது. இதற்கு கொஞ்சம் கால அவசாகம் அளிக்க வேண்டும். விவசாயிகள் பொறுமை காக்க வேண்டும். பிரச்னை என்ன என்பதை புரிந்து கொண்டேன். அதற்காக உடனடியாக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க நான் உத்தரவிட முடியாது. இதுபற்றி நீர்வளத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி இடைக்காலமாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன்,’ என்றார். கூட்டத்தில் ரங்கப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், ‘ஏரியை சேதப்படுத்தும் வகையில், மண் வெட்டி எடுக்கப்படுவதை கண்டித்து, தேசிய கொடி அணிந்து வந்து கலெக்டரிடம் முறையிட்டார். இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன், கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் பிரேமா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டிஆர்ஓவுடன் விவசாயிகள் மோதல்
கலெக்டர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தின் துவக்கத்தில் ஏற்கனவே பெயர் கொடுத்த விவசாயிகள் அனைவரும், தங்களது கோரிக்கை குறித்து பேசுவார்கள். கூட்டத்தின் இறுதியில் தான், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும். இந்த நடைமுறைகளை கலெக்டர் மதுபாலன் நேற்று மாற்றினார். முதன் முதலாக நேற்று வியாழக்கிழமை குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் துவக்கத்திலேயே விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பின்னர், அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் அளித்தார். அதற்கு பிறகே விவசாயிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அமர போதுமான இருக்கை வசதி செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் கூச்சலிட்டனர். இதை டிஆர்ஓ சரவணன் கண்டித்தார். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், இருக்கை வசதி கூட செய்து கொடுக்காமல் என்ன குறைதீர் கூட்டம் நடத்துகிறீர்கள்? என டிஆர்ஓவிடம் வாக்குவாதம் செய்தனர்.
