மாவட்டத்தில் 9 மையங்களில் 3,397 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதினர்

 

நாமக்கல், ஜூன் 22: நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 9 மையங்களில் நடைபெற்ற நீட் மறுதேர்வினை 3,397 மாணவ, மாணவிகள் எழுதினர். 719 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் மாணவர்கள் அவதி அடைந்தனர். நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, வெளி மாநிலங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே அவுட் ஆனது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீட் மறுதேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 9 மையங்களி நீட் மறுதேர்வு நடைபெற்றது. மொத்தம் 4116 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வளையப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வலையபட்டி, உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 9 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு துவங்கிய தேர்வு மாலை 5.15 மணி வரை நடைபெற்றது.

Related Stories: