பள்ளிபாளையத்திற்கு கடத்திய 700 கிலோ குட்கா சிக்கியது

 

பள்ளிபாளையம், ஜூன் 22: பெங்களூருவிலிருந்து பள்ளிபாளையத்திற்கு கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்களை, வாகனத்துடன் கைப்பற்றிய போலீசார், மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து பள்ளிபாளையத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக எஸ்பி கிரீஷ் அசோக் யாதவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் நேற்று காலை ஆலாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால், போலீசார் மீது மோதுவது போல வந்த அந்த வாகனம், நிற்காமல் வேகமாக சென்றது.

இதையடுத்து. போலீசார் அந்த வாகனத்தை துரத்தி சென்று பிடித்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில் அந்த வாகனத்தில் பழைய அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா, கூலிப் போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாகனத்தில் இருந்த சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன்(35), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சதீஷ்குமார்(27), பாலக்கோடு ரஞசித்(20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பெங்களூருவில் தாராளமாக கிடைக்கும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி சரக்கு வேனில் கடத்தி வந்து பள்ளிபாளையத்தில் பதுக்கி வைத்து, பவானி, ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரகசியமாக சப்ளை செய்தது தெரியவந்தது.

Related Stories: