வாஷிங்டன்: இந்தியா மற்றும் இந்திய வம்சாவளிகளின் கல்விக்கான அறக்கட்டளை சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை உதவி செயலாளர் பெத்தானி பவுலோஸ் மோரிசன் பேசுகையில், ‘‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இடையே எட்டப்பட்ட புரிதலின் அடிப்படையில், இந்தியாவில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில், வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான எங்கள் நோக்கத்தை அறிவித்தோம். இப்போது அதை எட்டுவதற்கு மிக மிக அருகில் உள்ளோம். இந்த வர்த்தக ஒப்பந்தம், பரஸ்பரம் இரு தரப்பும் பயனளிக்கும் விதிமுறைகளின் அடிப்படையில், 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய சந்தையை அமெரிக்க பொருட்களுக்கு திறந்து விடும்’’ என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் நடந்த 2 நாள் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று முடிந்தது. ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக தொலைநோக்கு பார்வையுடன் அமைந்ததாக அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளார். அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
