துபாய்: ஈரான், அமெரிக்க இடையே கடந்த 18ம் தேதி இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், நிரந்தர மற்றும் இறுதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருநாடுகளும் 60 நாள்கள் கெடு விதித்துள்ளன. இதனால் ஈரான், அமெரிக்கா இடையேயான போர் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள போதிலும், ஈரானுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரானில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அண்மையில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்கள் ஒட்டுமொத்த சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வௌியிடுகிறோம்.
சமீபத்திய மேம்பாடுகள் இருந்தபோதிலும், அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்திய குடிமக்கள் ஈரானுக்கு அவசியமற்ற பயணங்களை தொடர்ந்து தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஈரானில் தற்போது வசிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஈரான் செல்ல வேண்டியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நம்பத்தகுந்த ஆதராங்கள் வாயிலாக உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஈரானில் தற்போதுள்ள மற்றும் அந்நாட்டுக்கு செல்லும் அனைத்து இந்திய குடிமக்களும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்கள் விவரங்களை விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
