லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமைச்சரவை உறுப்பினர் டேரன் ஜோன்ஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஆளும் தொழிலாளர் கட்சியானது புதிய தலைவரை தேர்ந்தெடுத்ததும் சில வாரங்களுக்குள் அவர் பதவியில் இருந்து விலகுவார்.
ஸ்டார்மரின் ஆதரவாளரான டேரன் ஜோன்ஸ் தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவிக்கப்பட்டார். கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி உள்ளார். இவர் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் முன்னணி வேட்பாளராக இருந்து வருகின்றார்.
இவருக்கு டேரன் ஜோன்ஸ் போட்டியாளராக இருப்பார் என்று கருதப்பட்டது. இந்நிலையில் பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என்று டேரன் ஜோன்ஸ் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஆண்டி பர்ன்ஹாம் பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார். அடுத்த வாரம் தனது பொருளாதாரத் திட்டங்கள் சிலவற்றை விளக்கி உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
