ஐநா: “காசா மீதான போரின்போது இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டே பாலஸ்தீன குழந்தைகளை குறி வைத்து கொன்றதற்கு ஆதாரங்கள் உள்ளது” என ஐநா அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அக்டோபர் 7, 2023ம் ஆண்டு முதல், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் பாலஸ்தீன குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் ஆய்வு செய்தது.
இதுதொடர்பாக எஸ்.முரளிதர் தலைமையிலான ஐநா சர்வதேச விசாரணை ஆணையம் வௌியிட்டுள்ள 100 பக்க அறிக்கையில், “அக்டோபர் 7, 2023 முதல் அக்டோபர் 7, 2025 வரையிலான காலகட்டத்தில் காசாவில் நடந்த மோதல்களால் குறைந்தது 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 44,143 குழந்தைகள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட குழந்தைகளில் ஐந்து வயதுக்குள்பட்டோர் 5,031 பேர். அவர்களில் 1,029 பேர் ஒரு வயதுக்குள்பட்டவர்கள் மற்றும் சுமார் 420 பேர் பச்சிளம் குழந்தைகள் பாலஸ்தீன குழந்தைகள் திட்டமிட்டு, குறி வைத்து கொல்லப்படுதல்,
சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற அவமானகரமான நடத்தைகள்(பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள் உள்பட), அத்துடன் அனாதை இல்லங்கள், சுகாதார மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற குழந்தைகளுக்கு அவசியமான முக்கிய உள்கட்டமைப்புகளை குறி வைத்தல் ஆகியவை தொடர்பான மறுக்க முடியாத ஆதாரங்களை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளது ” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.
