நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது மிகப்பெரிய சவால்: ரஷ்யாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

 

மாஸ்கோ: மாறிவரும் சூழலில் நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார். இந்திய நீதிமன்றங்களில் இ- மனு தாக்கல், டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மற்றும் வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட நவீன வசதிகள் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத் தீர்ப்புகள் 16 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நீதிமன்றங்களின் செயல்பாட்டை விரிவுபடுத்தினாலும், நீதிபதிகளின் ஆழமான அறிவு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே தரமான நீதியை வழங்க முடியும். வேகமாக மாறிவரும் உலகில் நீதி நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை எவ்வாறு தக்கவைப்பது என்பதே தற்போது நீதிமன்றங்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இருநாட்டு உச்ச நீதிமன்றங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்று உரையாற்றினார். ரஷ்ய உச்ச நீதிமன்ற நீதிபதி இகோர் கிராஸ்னோவ் முன்னிலையில் அவர் பேசுகையில், ‘நீதி வழங்குவது என்பது அடிப்படையில் ஒரு மனித முயற்சியாகவே இருக்க வேண்டும். தகவல்களைத் திரட்டுவதற்கும், மொழிபெயர்ப்பு பணிகளுக்கும் செயற்கை நுண்ணறிவு உதவலாமே தவிர, தீர்ப்பு வழங்கும் முக்கிய பணியில் தொழில்நுட்பம் ஒருபோதும் நீதிபதிகளுக்கு மாற்றாக அமைய முடியாது. விரைவான மற்றும் நியாயமான நீதியை வழங்குவதில் நீதிபதிகளின் தனிப்பட்ட அர்ப்பணிப்பே மிக முக்கியமானது. மாறிவரும் சூழலில் நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

 

Related Stories: