வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தொடங்கிய ராணுவத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இந்தப் போருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய சூழலில், போரை நிறுத்துமாறு வலியுறுத்தி அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கு நடந்த வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 208 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 1973ம் ஆண்டின் போர் அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
இதன் தொடர்ச்சியாக, செனட் சபையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக 50 வாக்குகளும், ஆதரவாக 48 வாக்குகளும் பதிவாகின. அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களே அவருக்கு எதிராக வாக்களித்தது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக அதிபரைக் கட்டுப்படுத்தாது என்று வெள்ளை மாளிகை கூறினாலும், டிரம்ப் தனது செல்வாக்கை இழந்து வருவதையே இந்த வாக்கெடுப்பு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; இதனை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில், ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் நிர்வாகம் தீவிர வியூகம் அமைத்து வருகிறது.
