குன்னூரில் தொடரும் கரடி நடமாட்டம்; பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சம்

குன்னூர்,ஜூன்24: குன்னூர் ரயில் பாதை, அம்பிகாபுரம் பகுதியில் பகல் நேரத்தில் உலா வந்த கரடியால் பொதுமக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடிநீர், உணவு தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வருவது தொடர் கதையாகி உள்ளது.

இந்நிலையில், குன்னூர்-ஊட்டி மலை ரயில் பாதையில் நேற்று பகல் நேரத்தில் ஒற்றை கரடி உலா வந்தது. ரயில் தண்டவாளத்தின் ஓரமாக இந்த கரடி உலா வந்த காட்சிகள் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.இதேபோல் குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியிலும் நேற்று பகல் நேரத்தில் ஒற்றை கரடி உலா வந்தது. குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள குன்னூர் செல்லும் சாலையைக் கடந்து, அங்கிருந்த தடுப்பு வேலியைக் குதித்துச் சென்று அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து ஓடியுள்ளது.

பகல் நேரத்திலேயே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கரடி சாலையைக் கடந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்ற இந்த சம்பவத்தால், அங்கு பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், அப்பகுதி பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: