பேருந்து நிலையத்தில் மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க பயிற்சி

நாமக்கல், மார்ச் 9: நாமக்கல் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் செயல் விளக்கங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டுகள், தினசரி மற்றும் வாரச்சந்தைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. முதன்முறையாக வாக்களிக்கும் 18 வயது நிரம்பிய புதிய வாக்கார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகராட்சி பஸ் ஸ்டாண்டில், விவிபேட் இயந்திரம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி செயல்விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டைகுமார், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, பிஆர்ஓ சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (ரெட் கிராஸ்) ராஜேஸ்கண்ணன், தாசில்தார் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளது. அதுசமயம் சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள், சிறப்பு காவலர் அலுவலராக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  எனவே, விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து, தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக பணிபுரியும் விருப்பத்தை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: