நாமக்கல், ஜூன் 9: ராசிபுரத்தில் மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ராசிபுரம் வி.நகர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, கலெக்டர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
வி.நகர் பட்டணம் சாலையில் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். அப்பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. சுமார் 300 மீட்டர் தொலைவில் வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ளன. குடிமகன்கள் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுவதால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
