பயிர்க்கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டம்

 

நாமகிரிப்பேட்டை, ஜூன் 16: தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாததை கண்டித்து, வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் முருகசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே கொங்காளம்மன் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் முருகசாமி கலந்து கொண்டு, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகள் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஜேடர்பாளையம், காக்காவேரி, மெட்டாலா, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து முருகசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பயிர் கடன் விவகாரத்தில், அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில், வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். உயர்மின் கோபுரத் திட்டங்கள், காவிரி நீர் பிரச்னை, மேகதாது அணை விவகாரம், அறிவிக்கப்படாத மின் துண்டிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். குறுவை சாகுபடிக்காக நிலத்தடி நீரை நம்பியிருக்கும் விவசாயிகள், கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் நலனை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: