வாஷிங்டன்: கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களை ஏற்றிச்சென்ற ஏர்போர்ஸ் ஒன் விமானம் ஓய்வு பெறுகின்றது. கடைசியாக அதிபர் டிரம்ப் தனது பிரான்ஸ் பயணத்தை முடித்து இந்த விமானத்தில் அமெரிக்கா திரும்பினார். அமெரிக்காவில் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் காலம் முதல் பல அதிபர்களுக்கு சேவையாற்றி வந்த மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டது ஏர்போர்ஸ் ஒன் போயிங் 747-200பி விமானம். இது மிகவும் நவீனமான விமானம் இல்லையென்றாலும் பல்வேறு வசதிகளை கொண்டது. இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் இந்த விமானம் தனது கடைசி பயணத்தை முடித்து ஓய்வுபெற்றது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரான்சில் பயணத்தை முடித்துக்கொண்டு கடைசியாக இந்த விமானத்தில் அமெரிக்கா திரும்பினார். இது தான் இந்த விமானத்தின் கடைசிப்பயணமாக அமைந்தது. ஜாயிண்ட் பேஸ் ஆன்ட்ரூஸ் தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தின் புகைப்படங்களை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் வெளியிட்டனர். நேற்று முன்தினம் இரவு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தின் கடைசிப் பயணத்தில் பயணித்தது எனக்கு கிடைத்த பெருமை என்று அமெரிக்காவின் தலைமை நெறிமுறை அதிகாரி மோனிகா கிரவுலி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால் கத்தார் நாட்டினால் அதிபர் டிரம்புக்கு பரிசாக வழங்கப்பட்ட போயிங் 747 விமானத்தை மாற்றியமைக்கும் பணிகள் மற்றும் பறக்கும் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக அமெரிக்க விமானப்படை கடந்த மாதம் அறிவித்து இருந்தது. அடுத்த மாதம் தெற்கு டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் பகுதிக்கு செல்லும்போது கத்தார் வழங்கிய ஜெட் விமானத்தில் முதல் பயணத்தை மேற்கொள்வது குறித்து அதிபர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
