என்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சினார்: டிரம்ப் கிண்டல்
பிரதமர் மோடிக்கும், இத்தாலி பிரதமர் மெலோனிக்கும் இருக்கும் நட்பு உலக பிரசித்தி. இருவரும் இணைந்து எடுக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல். இதனால் தான் பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்ற மெலோனி, பிரதமர் மோடியிடம் நம் ஜோடி தான் இணையத்தில் மிகவும் ஹிட் என்று கூறி மகிழ்ந்தார். இந்த நிலையில் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிதொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மிகவும் விரும்பினார்.
ஆனால் நான் விரும்பவில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி டிரம்ப் கூறுகையில்,’ நான் அவருடன் பேசியதில் மெலோனி மகிழ்ச்சியடைந்திருக்கலாம். அவருடன் பேச வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவர் கெஞ்சினார். அவர் என்னுடன் புகைப்படம் எடுக்க மிகவும் விரும்பினார். நான் அதை எடுத்திருக்க மாட்டேன், ஆனால் அவர் மீது பரிதாபம் கொண்டேன்’ என்று டிரம்ப் கூறினார்.
இத்தாலியும், நானும் ஒருபோதும் கெஞ்சுவதில்லை: மெலோனி விளாசல்
ஜி7 உச்சிமாநாட்டின் போது இத்தாலி பிரதமர் மெலோனி என்னிடம் புகைப்படம் எடுக்க கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது முற்றிலும் புனையப்பட்டது என்று மெலோனி தெரிவித்தார். இதுதொடர்பாக மெலோனி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘‘ அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றுகள் முற்றிலும் புனையப்பட்டவை; வெளிப்படையாகச் சொல்வதானால், நான் அதிர்ச்சியடைகிறேன். அமெரிக்க அதிபர் ஏன் தனது சொந்த நட்பு நாடுகளிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை;
சொல்லப்போனால், இது நடப்பது முதல் முறையல்ல. மேற்கத்திய நாடுகளின் எதிரிகள் மற்றும் அமெரிக்காவின் எதிரிகள் விஷயத்தில் அவர் இதே போன்ற உறுதியை வெளிப்படுத்தாதது வருத்தமளிக்கிறது; மாறாக, சில குறிப்பிட்ட தலைமைகளிடம் அவர் மிகவும் இணக்கமான போக்கையே காட்டுகிறார். இருப்பினும், அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: நானும் இத்தாலியும் ஒருபோதும் யாரிடமும் கெஞ்சுவதில்லை’ என்றார்.
நான் மதிக்கும் தலைவர்கள்: மோடி, ஜி ஜின்பிங்
நீங்கள் மிகவும் போற்றும் உலகத் தலைவர் யார் என்று கேட்கப்பட்டபோது, பிரதமர் மோடி, ஜின்பிங் பெயர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதே சமயம் பலவீனமானவர்கள் என்று கருதும் எந்தத் தலைவர்களின் பெயரையும் குறிப்பிட மறுத்துவிட்டார். பின்னர் அவர், ஜி7 அமைப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லாதது குறித்துப் பேசினார். 2014ல் கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, இந்த அமைப்பு ஜி8 ஆக இருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்கப் பயணம் திடீர் ரத்து
டிரம்பின் கருத்துகளின் விளைவாக, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தனது திட்டமிடப்பட்ட அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மெலோனிக்கு எதிராக டிரம்ப் கூறிய அவமதிப்பான வார்த்தைகள் ஒட்டுமொத்த இத்தாலியையும் புண்படுத்தியுள்ளதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவர் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்குச் செல்லவிருந்தார்.
