திருப்பூர், ஜூன் 19: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் கொட்டப்படும் பின்னலாடை நிறுவன கழிவுகள் மற்றும் குப்பைகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பனியன் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் அது சார்ந்த துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனங்களில் இருந்து வெளியாகும் பாலியஸ்டர் துணி கழிவுகள், போம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கடந்த சில வாரங்களாக மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, கழிவுகளை இருப்பு வைக்க இயலாத சில நிறுவனங்கள் அவற்றை அப்புறப்படுத்த நள்ளிரவு நேரங்களில் மாநகரின் முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும் கொட்டிச்செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து செல்கின்றனர்.
