தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் தலை தூக்கும் கள்ளச்சாராயம்

 

தாராபுரம், ஜூன் 16: தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் டிரோன் மூலம் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த 17 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 4 இடங்களில் இருந்த கடைகள் அரசு உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மது பிரியர்கள் தனியார் பார்களில் அதிக விலை கொடுத்து மதுஅருந்திவருகின்றனர். இதனால், அதிக விலை கொடுத்து மதுவாங்க முடியாத மது பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடிச்சென்றுள்ளனர்.

தாராபுரம் மற்றும் அலங்கியம், தளவாய்பட்டினம், அமராவதி ஆறு, சண்முகா நதி கரையோர பகுதிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன் அதிக அளவில் சமூக விரோதிகளால் கள்ளச்சாராயம் காய்ச்சி சுற்றுபுற கிராமங்களில் விற்பனை செய்துள்ளனர். இதை காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுத்தனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு முக்கிய மூலப்பொருளான வேலா மரத்தின் பட்டை சில பகுதிகளில் மரங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு இருப்பது பற்றியும், அருகில் உள்ள மாவட்ட பகுதிகளில் இருந்து கருப்பு நிற கரும்புச்சர்க்கரை விற்பனை கணிசமாக அதிகரித்ததாக ஊர்ஜிதம் அற்ற தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து மீண்டும் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா?

என்பதை ஆய்வு செய்ய திருப்பூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டிஎஸ்பி ஆறுமுகம் மேற்பார்வையில், தாராபுரம் உட்கோட்டம் அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் பாளையம், அணைத்தோட்டம், செலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமராவதி ஆற்று படுகை ஒட்டி சட்ட விரோத சாராய விற்பனை நடைபெறுகிறதா? என தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன், தலைமையில் போலீசார் ஆற்றின் கரையோர பகுதிகளில் டிரோன் மூலம் தீவிர தேடுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் இந்த நடவடிக்கையால் கரையோர பகுதி கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: