200 யூனிட் இலவச மின்சாரம் இல்லை வழக்கத்தை விட எகிறிய கட்டணம்

 

திருப்பூர்,ஜூன்16: தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 500 யூனிட்டுகளுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த மாதம் மற்றும் இம்மாதம் வெளியாகியுள்ள மின் கணக்கீடு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு, அறிவிக்கப்பட்ட 200 யூனிட் இலவச மின்சார சலுகை கிடைக்கவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது.

இதுமட்டுமன்றி, வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தும் மின் சாதனங்களைத்தவிர, கூடுதலாக எந்தவொரு புதிய சாதனங்களையும் பயன்படுத்தாத நிலையிலும், இந்த முறை மின் பயன்பாட்டு யூனிட்டுகள் வழக்கத்தை விட அதிகமாக காட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உதாரணமாக, திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த பிரபா என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக 100 யூனிட் இலவச மின்சாரத்திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார். வழக்கமாக இவரது வீட்டில் 50 முதல் 70 யூனிட் வரை மட்டுமே மின் பயன்பாடு இருந்து வந்த நிலையில், இந்த முறை அது 100 யூனிட்டைக் கடந்துள்ளது. மேலும், புதிய அரசின் 200 யூனிட் இலவச சலுகையும் கிடைக்காததால், அவர் முதன்முறையாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கமாக சில நூறு ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த சாமானிய மக்கள், தற்போது சில ஆயிரங்களில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் கட்டண உயர்வு மின் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியா? அல்லது மின் கட்டணம் ஏதேனும் மாற்றி உயர்த்தப்பட்டுள்ளதா? என்ற விபரம் தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குழப்பத்தில் உள்ளனர். அரசின் இலவச மின்சார அறிவிப்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள திருப்பூர் பகுதி மக்கள், இந்த மின் கட்டண உயர்வு மற்றும் கணக்கீட்டு முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: