தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அருகே செயல்படும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாரளிக்கப்பட்டது. அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி கிடைப்பதில்லை என்றும், அம்மா உணவகத்தில் ரூ.1 க்கு இட்லி வாங்கி அதனை ரூ.10க்கு தனியார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்த புகாரை தொடர்ந்து இன்று காலை அம்மா உணவகத்தில், நெல்லை மண்டல நகராட்சி இயக்குநர் ரவிச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். டோக்கன் கொடுக்கும் கவுண்டர், இட்லி விநியோகம் செய்யும் இடத்தை ஆய்வு செய்தார். பார்சல் வழங்கக் கூடாது என்றும் அம்மா உணவகத்தில் வைத்து தான் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கோவில்பட்டி நகராட்சி ஆணையர் சுகந்தியும் உடன் இருந்தார். நெல்லை மண்டல நகராட்சி இயக்குநர் ரவிச்சந்திரன் அம்மா உணவாக ஊழியர்களிடம் பேசும்போது, யாராவது தவறு செய்தீர்கள் என்றால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தார்.
உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி தவறு ஏற்பட்டிருந்தால் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மண்டல நகராட்சி இயக்குநர் ரவிச்சந்திரன் உறுதியளித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறுவதாகவும் பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. எனவே இது போன்ற செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
