அவனியாபுரம்: நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் நாட்டின் சில பகுதிகளில் விடைத்தாள் வெளியானதை தொடர்ந்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் புதிய வினாத்தாள் தயார் செய்யப்பட்டது. இந்த மறு தேர்வு வினாத்தாள் டெல்லியில் இருந்து ராணுவத்தின் விமானப்படை சிறப்பு விமானம் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெல்லியில் இருந்து பெங்களூரு வழியாக நேற்று மதுரை வந்து சேர்ந்தது. மதுரையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மையங்களுக்கு அஞ்சல் துறை வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வாகனங்களுக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல் துறை சிறப்பு பாதுகாப்பு படையினர் வாகனங்களில் முன்னும் பின்னும் சென்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து வினாத்தாள்களை ஏற்றிக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு அஞ்சல் துறை வாகனம் நேற்றிரவு புறப்பட்டது. இந்த வாகனத்திற்கு பாதுகாப்பிற்காக சென்ற காவல்துறை வாகனம், விமான நிலையத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவிலேயே பழுதானது.
இதையடுத்து வினாத்தாள் சென்ற வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதும், வினாத்தாள் வாகனம் பாதுகாப்புடன் புறப்பட்டுச்சென்றது.
