சென்னை: விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பணிந்த தவெக அரசு, தற்போது கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75 ஆயிரம் வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்புக்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், தவெக, 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு பாதி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாக, ரூ.50 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல கட்ட போராட்டம், மறியல், முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசு பணிந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
முதல்வர் விஜய் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வந்தது. இதுபற்றி ஆய்வு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில்1.5.2025 முதல் 28.2.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ரூ.75 ஆயிரத்து மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் பணப்பயன் கிடைக்கும்.
- 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடி தொகை ரூ.3,599.67 கோடி
- 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடி தொகை ரூ.1,995.42 கோடி
- 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடி தொகை ரூ.337.15 கோடி
- ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடி தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 1.5.2025 முதல் 28.2.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முழுமையாக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
