பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணியிலும் ஈடுபட விடமாட்டோம்

பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர். தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் வாசித்தார். அவரை பின்பற்றி, அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: