பெரம்பலூர், ஜூன் 9: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தவெக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக தவெக விஜய் அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் நேற்று பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழக தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். நகர தலைவர் சுரேஷ் வரவேற்றார். விவசாய அணி மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயபாலாஜி, அருண் பிரசாத், பழனியாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில், 5 ஏக்கர் நிலத்திற்கு கீழ் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக தாங்கள் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரத்துசெய்வோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை நம்பி பாவப்பட்ட ஏழை விவசாயிகள், தங்களது வாக்குகளை செலுத்தி அவரை முதலமைச்சர் ஆக்கினர். ஆனால் ஆட்சிக்கு வந்து முதல் வாரமானதும், ரூ. 50000 வரையில் மட்டும் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருப்பது ஏழை விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டி இறக்கியது போல் உள்ளது.
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால், வறட்சிமிகு மாவட்டமான பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மக்காச் சோளத்தை நம்பி பயிரிட்டு அதற்கு போதிய விலை இல்லாமல் மிகுந்த மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய அரசு தங்களது வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வில் ஒளியை ஏற்றும் என்று எண்ணி இருந்த நிலையில், புதிய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றியது போல் உள்ளது.
ஆகவே புதிதாக அமைந்துள்ள அரசு தங்கள் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உடமைகளையும் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் வாக்குறுதியை நிறைவேற்றும் வரையில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு அறவழிப்போராட்டத்திற்கு ஒன்றிணைவார்கள் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
