ஜெயங்கொண்டம், ஜூன் 4: அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறைக்கு மாதிரி பயிற்சி வகுப்பு நடந்தது. அரியலூர் ஆயுதப்படை கூட்டரங்கில் காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு நேற்று பயிற்சி வகுப்பில் அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புலனாய்வு குறித்து வகுப்பு எடுத்தார். அரியலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் அரியலூர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை உள்ள 27 காவல் துறையினருக்கு குற்ற சம்பவம் நடைபெற்ற இடத்தை புலனாய்வு செய்தல், தடயங்களை சேகரித்தல் மற்றும் வழக்குபதிவு செய்தல் முதலியவை குறித்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
வாரத்தில் மூன்று நாட்கள், இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர், விபத்து ஏற்பட்டால் சம்பவ இடத்தில் சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும், புலனாய்வு செய்தல், தடயங்களை சேகரித்தல், வழக்கு பதிவு செய்தல் என்பவை குறித்து மாதிரி பயிற்சி வகுப்பு கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் விபத்து ஏற்பட்டது போல தத்ரூபமாக வகுப்புகள் எடுக்கப்பட்டன.
