×

உலகின் நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறுகிறது: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘உலகம் நிச்சயமற்ற காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கும் சூழலிலும், இந்தியா நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது’’ என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி தலைமையில் 11வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும், அனைத்து மாநில முதல்வர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் 4 முக்கிய விவகாரங்கள் மையமாக கொண்டு ஆலோசிக்கப்பட்டது. மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை அடிப்படையாக கொண்டு அடுத்த 15 ஆண்டுகளுக்கான நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம், பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், மற்றும் நாடு முழுவதும் சிறு குறு தொழிலை எப்படி ஊக்கப்படுத்துவது, பணவீக்கத்தை எவ்வாறு சரி செய்து ஜிடிபியை அதிகப்படுத்துவது மாநில தொலைநோக்குப் பார்வைகளை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  முன்னதாக கூட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய தூணாகும். விவசாயம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் அறிவியல் மற்றும் புத்தாக்கம் வரை, நாரி சக்தி அனைத்துத் துறைகளிலும் பங்களித்து வருகிறது. பெண்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணரவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லவும், மாநிலங்கள் அவர்களின் கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் நமது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன. இதன் மூலம், அவை சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி, போட்டித்திறனை மேம்படுத்தி, உலகளாவிய சந்தைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பாக இந்தியாவின் மக்கள்தொகைப் பலன் என்பது நாம் இழக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும்.

தரமான கல்வி, தேவைக்கேற்ப திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் நமது இளைஞர்களுக்குச் சரியான சூழலை உருவாக்குவது ஒரு முன்னுரிமையாகத் தொடர வேண்டும். வலுவூட்டப்பட்ட இளைஞர்களே விக்ஷித்பாரத் நோக்கிய நமது பயணத்தின் உந்து சக்தியாக இருப்பார்கள். குறிப்பாக மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகளுக்கு ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் பகிர்வு ஆகியவை வழிகாட்ட வேண்டும்.

மாநிலங்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், விக்சித்பாரத் தொலைநோக்குப் பார்வையை நோக்கி ஒன்றிணைந்து செயல்படவும் உதவும் ஒரு கூட்டு முயற்சித் தளமாக நிதி ஆயோக் முக்கியப் பங்காற்ற முடியும்.  உலகம் நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற ஒரு காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலிலும் இந்தியா நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்லும்போது, ​​நமது கூட்டுப் பொறுப்பு இன்னும் பெரிதாகிறது. இவர் அவர் பேசினார். கூட்டத்தின் முடிவில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்தளித்தார். மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்களுடன் பிரதமர் மோடி குழு படம் எடுத்துக் கொண்டார்.

கூட்டத்தில் தலைமைச் செயல் அதிகாரி நிதி சிப்பர் கூடுதல் பொறுப்பு வகித்தார். புதுவை முதல்வர் ரங்கசாமியை தவிர அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

* பிரதமர் மோடியை தனியாக சந்தித்த முதல்வர் விஜய்
நிதி ஆயோக் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை, தமிழ்நாடு முதல்வர் விஜய் தனியாக சந்தித்து பேசினார். அதைப்போல் உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் தனித்தனியாகச் சந்தித்து, தங்கள் மாநிலங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கடந்த மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியை விஜய் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.

* போதைப்பொருள் பயன்பாடு மற்றும் இணையவழி மோசடி போன்ற வளர்ந்து வரும் சமூகச் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.

* செயற்கை நுண்ணறிவை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். ஏஐ துறையில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை மக்கள் பெறச் செய்ய வேண்டும்.

* எல் நினோ நிகழ்வால் எழும் பருவநிலை கவலைகளை கவனத்தில் கொண்டு, நீர் சேமிப்பு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தினார்.

Tags : India ,PM Modi ,NITI Aayog ,New Delhi ,Modi ,11th ,NITI Aayog meeting ,Delhi… ,
× RELATED நீலகிரியில் 2 பேரை அடித்துக்கொன்ற...