புதுடெல்லி: சித்தாந்த ரீதியாகப் பிளவுபடாத ஒரே கட்சி காங்கிரஸ் என்றும், ஆர்எஸ்எஸ்-பாஜ கூட்டணியை எதிர்ப்பதற்கு அதுவே சிறந்த நிலையில் உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறினார். காங்கிரஸ் பொது செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில்,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அவர் பேசுசுகையில்,நாட்டில் சித்தாந்த ரீதியாகப் பிளவுபடாத ஒரே கட்சி காங்கிரஸ்தான், ஆர்.எஸ்.எஸ்-பாஜ கூட்டணியை எதிர்கொள்ள அதுவே மிகவும் பொருத்தமானது. சித்தாந்த உறுதித்தன்மையின் காரணமாக அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கட்சி மேலும் வலுப்பெறும். நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. இது அரசாங்கத்தின் கொள்கைகளால் ஏற்பட்டதே தவிர, சர்வதேச காரணிகளினால் ஏற்பட்டது அல்ல’ என்றார்.
