புதுடெல்லி: மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரகாஷ் சிக் பாரைக் நேற்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், கட்சியிலிருந்தும் விலகினார். மேற்குவங்கத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், பாஜ முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 60 பேரவை உறுப்பினர்கள் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக ரிதப்ரதா பானர்ஜி பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். ரிதப்ரதா பானர்ஜி அணிக்கு 19 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் கடந்த சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். இதேபோல் சுஷ்மிதா தேவ் நேற்று முன்தினம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பிராகஷ் சிக் பாரைக் நேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் விலகி உள்ளார்.
* மம்தாவை விட்டு விலக மாட்டேன் சத்ருஹன்சின்ஹா உருக்கம்
திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சத்ருஹன் சின்ஹா பாஜவில் இணைவது குறித்த யூகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “சில தேவைகள், பயம் காரணமாக சிலர் மம்தா பானர்ஜியை விட்டு விலகி இருக்கலாம். ஆனால், திரிணாமுல் கட்சியையோ, அதன் தலைவரையோ விட்டு விலக கூடாது என்பதே என் கொள்கை.
நான் திரிணாமுல் காங்கிரஸ், மம்தாவுடன் இருந்தேன். இருக்கிறேன். இருப்பேன்” என்று தெரிவித்தார். இதேபோல், திரிணாமுல் மாநிலங்களவை உறுப்பினரான பாபுல் சுப்ரியோ தன் எக்ஸ் பதிவில், “நான் மம்தா பானர்ஜி அணியிலேயே இருப்பதாக கூறி உள்ளார். ஒரு கப்பல் சிக்கலான சூழலில் இருக்கும்போது அதை கைவிட்டு செல்வது முறையல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
* நானா? மருமகனா? கல்யாண் பானர்ஜி காட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யான் பானர்ஜி, “நான் மம்தாவுடன்தான் இருக்கிறேன். ஆனால், மம்தா பானர்ஜி அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன் இருக்க வேண்டுமா? அல்லது திரிணாமுல் காங்கிரசுடன் இருக்க வேண்டுமா? என்பதை மம்தா முதலில் முடிவு செய்ய வேண்டும் ” என காட்டமாக தெரிவித்தார்.
