திருவனந்தபுரம்: கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு உள்பட சில பகுதிகளில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. இந்நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருவது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு அருகே உள்ள ராமநாட்டுகரை பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு வாலிபர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நிபா பாதித்த வாலிபருடன் நெருக்கமாக இருந்த 77 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் நென்மேனி உள்பட சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதி பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 14ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
