×

மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்பு 3 பா.ஜ வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு: மபி மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு

போபால்: மபி மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் 3 பா.ஜ வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மத்​திய பிரதேச மாநிலத்​தில் காலி​யாக உள்ள 3 மாநிலங்​களவை இடங்​களுக்கு தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டது. இதில், ஆளும் பாஜ 2 இடத்​தி​லும் காங்​கிரஸ் ஒரு இடத்திலும் எளி​தாக வெல்ல முடி​யும் என்ற நிலை இருந்தது. ஆனால் பாஜ பொதுச் செய​லா​ளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்டிருந்​தனர்.

பாஜ​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 3வது வேட்​பாள​ராக மகேஷ் கேவட் அறிவிக்கப்பட்டார். காங்​கிரஸ் சார்​பில் தமிழ்நாட்டை பூர்​வீக​மாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்​கல் செய்​திருந்​தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில், நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்​பு மனு​வில் குறிப்​பிடப்​ப​டாத​தால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தரப்பில் தலைமை தேர்தல் கமிஷனிலும், உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும் அவரது மனு மீண்டும் ஏற்கப்படாததால், பாஜவின் 3 வேட்பாளர்களான தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். மேலும் அவர்களுக்கு வெற்றிச்சான்றிதழையும் வழங்கினார். இதையடுத்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பாஜ மாநிலத் தலைவர் ஹேமந்த் கண்டல்வாலைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

* உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,’ தேர்தல் செயல்முறை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது எவ்வாறு சாத்தியம்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது,’மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவியல் வழக்கு குறித்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை தவறாக நிராகரித்து உள்ளார் என்று மீனாட்சி நடராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார். மேலும் இம்மனுவை அவசர அடிப்படையில் பரிசீலிக்குமாறு அமர்விடம் வலியுறுத்தினார்.

அப்போது,’ இந்த மனு விசாரணைக்கு உகந்ததா?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி மிஸ்ரா, தேர்தல் தொடர்பான மனுவைத் தாக்கல் செய்வதே இதற்கான சரியான வழிமுறை என்றும் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ். நாயுடு, இம்மனுவை அவசர அடிப்படையில் குறிப்பிடுவதை எதிர்த்ததுடன், தேர்தல் ஆணையத்திற்கு இம்மனுவின் நகல் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,’குறைபாடுகள் சரிசெய்யப்பட்டால் மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும்’ என்று அறிவித்தனர்.

* எந்த முடிவையும் அறிவிக்காத தேர்தல் ஆணையம்
தெலங்கானா வழக்கு தொடர்பான தகவல்களை மறைத்ததாகக் கூறப்பட்ட காரணத்தால் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த பிரச்னையில் காங்கிரஸ் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டையும் நாடி தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நேற்று மாலை வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காத நிலையில், மபி தேர்தல் அதிகாரி 3 பா.ஜ வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து விட்டார்.

Tags : Meenakshi Natarajan ,BJP ,Rajya Sabha ,Bhopal ,Rajya Sabha Congress ,Madhya Pradesh ,
× RELATED கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு...