×

டெல்லியில் 3 நாள் முகாம் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் இருந்து வரும் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் இங்கு தான் தங்கி அரசு சார்ந்த விவகாரங்களை மேற்கொள்வார்கள்.

குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட இங்கு தங்குவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 11வது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய் தற்போது தமிழ்நாடு இல்லத்தில் தான் தங்கி உள்ளார். இதுபோன்ற சூழலில் நேற்று காலை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருக்கும் உணவகத்தில் நூற்றுக்கும் மேலானோர் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உள்ளே இருந்த ஏ.சியில் இருந்து கரும்புகை அதிகமாக வந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை சார்ந்த ஊழியர்கள் ஏ.சி பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து கரும்புகையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட ஆய்வில் அதிக மின் அழுத்தம் காரணமாக ஏ.சியின் உள்புறம் இருந்த ஒயர்கள் ஒன்றுடன் ஒன்றாக தீப்பற்றியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு இல்லம் முழுவதும் இருக்கும் அனைத்து அறைகளிலும் முழு சோதனைகளுடன் கூடிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தங்கியிருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tamil Nadu ,Vijay ,Delhi ,New Delhi ,Chief Minister ,Chanakiapuri ,
× RELATED கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு...