நியூ சண்டிகர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உள்ளது. அறிமுக வீரரான சுதர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் ஆகியோர் அசத்தல் பந்துவீசி வெற்றிக்கு உதவினர். இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் கடந்த 6ம் தேதி துவங்கியது. முதல் நாள் ஆட்ட முடியவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 103, ரிஷப் பண்ட் 50 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. 126 ரன் எடுத்த நிலையில் கில், முகமது சலீம் சபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிஷப் பண்ட் 81 ரன், துருவ் ஜூரல்(20) ரன் எடுத்து அவுட் ஆயினர். தனது முதல் டெஸ்டில் களமிறங்கிய பவுலிங் ஆல்ரவுண்டரான மனவ் சுதர் அதிரடியாக ஆடி 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 52, குல்தீப் யாதவ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சலீம் சபி 6 விக்கெட், ஷரிபி, ஷாகிதி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆப்கானிஸ்தான் அணி, அறிமுக வீரரான இடது கை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இவர் துவக்க வீரர் அப்துல் மாலிக்கை, தனது முதல் சர்வதேச விக்கெட்டாக வீழ்த்தினார். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்ததால், ஆப்கானிஸ்தான் தடுமாறியது. 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரஹ்மத் ஷா 43, அஸ்மத்துல்லா உமர்சாய் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று மூன்று நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அஸ்மத்துல்லா உமர்சாய் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷரபுதீன் அஷ்ரப் 11 ரன்களிலும் நடையை கட்ட, அரை சதம் விளாசிய ரஹ்மத் ஷா 60 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 152 ரன்னில் ஆப்கானிஸ்தான் சுருண்டது. மானவ் சுதர் 6, பிரசித் கிருஷ்ணா 3, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
412 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலா ஆன் உடன் 2வது இன்னிங்ஸை ஆப்கானிஸ்தான் தொடங்கியது. செடிகுல்லா அடல் 42, ரஹ்மானுல்லா குர்பாஸ் 24, ரஹ்மத் ஷா 13 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்ததால், 9 விக்கெட்டுக்கு 112 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி எடுத்தது. ஷராபுதீன் அஷ்ரப் காயத்தால் களம் இறங்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் 112 ரன்களில் ஆல்அவுட் ஆனதால் இந்திய இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 4, குல்தீப் யாதவ் 3, மானவ் சுதர் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 13ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
