இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு முசாபராபாத் அருகே பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் விமானி உட்பட அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளன. விபத்துக்கான துல்லியமான தொழில்நுட்பக் காரணத்தை கண்டறிய முடியவில்லை.
ஆப்கன் மீது பாக். குண்டுமழை: 13 பேர் பலி
காபூர்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகின்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. கோஸ்ட் குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் 11 குழந்தைகள் , ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தானிடம் இருந்து உடனடியாக எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹசன் கெல் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் என சந்தேகப்படுபவர்கள் பாதுகாப்பு சாவடி மீது தாக்குதல் நடத்திய ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
