துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியில் அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா நேற்று ஈரானின் பல்வேறு நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இது, மீண்டும் மத்திய கிழக்கை உலுக்கி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த நிலையில், கடந்த ஏப்ரல் 8ம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
இதற்கு, ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் மீது லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருவது முக்கிய காரணம். தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கடந்த 8ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரானின் சில பகுதிகளை தாக்கியது. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக நடந்த இந்த மோதல் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இருதரப்பும் எச்சரிக்கை விடுத்து தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தன. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து 2 அமெரிக்க வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹெலிகாப்டரை ஈரான் தான் சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா நேற்று அதிகாலை ஈரானின் பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வான் பாதுகாப்பு, தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் தளங்களை குறிவைத்து குண்டு வீசியது. அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையினர் நடந்த இந்த வான்வழி தாக்குதலில் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்திய கடல் வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இது பதிலடி என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் கூறியது.
இதற்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியது.
ஈரானின் 5 ஏவுகணைகளை வானில் இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் கூறி உள்ளது. ஜோர்டானின் முவாபக் சால்டி விமானப்படை தளத்தில் தான் அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருதரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் இது மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கி உள்ளது. மேலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளையும் தடம் புரளச் செய்யும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது.
* மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான விலையை அவர்கள் கொடுக்கப் போகிறார்கள். இன்று நாங்கள் அவர்கள் மீது மீண்டும் கடுமையான தாக்குதலை நடத்த உள்ளோம்’’ என்றார். இதனால், ஈரானில் உள்ள பாலங்கள், பொதுச் சேவை நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக போரின் தொடக்கத்தில் டிரம்ப் மிரட்டியிருந்ததை தற்போது அவர் செயல்படுத்தக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
* ஹெலிகாப்டர் வீழ்ந்தது எப்படி?
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் டிரோன் மோதியதில் அமெரிக்காவின் ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் ராவன்சி அளித்த பேட்டியில், ‘‘ஈரான் வேண்டுமென்றே ஹெலிகாப்டரைத் தாக்கவில்லை’’ என்றார்.
* பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்கா எங்கள் உறுதியை சோதிக்க முடிவு செய்துள்ளது. ஈரானின் ஆயுதப் படைகள் எந்தவொரு தாக்குதலையும் அல்லது அச்சுறுத்தலையும் பதிலடி கொடுக்காமல் விடாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்’’ என கூறி உள்ளார்.
