அதிபர் டிரம்பின் 1 லட்சம் டாலர் எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு; இந்திய ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி

வாஷிங்டன்: எச்-1பி விண்ணப்பங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாததால் அது சட்டவிரோதனமானது என அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் நீண்ட காலம் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெருமளவில் இந்திய ஐடி ஊழியர்களும், மருத்துவர்களும் பெறுகின்றனர்.

அதிக திறமை கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்தவே இந்த விசா வழங்கப்படுகிறது. ஆனால், அங்குள்ள நிறுவனங்கள் இதை தவறாக பயன்படுத்தி குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதால் அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் டிரம்ப் அரசு குற்றம்சாட்டியது.

எனவே, குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதை தடுக்க, எச்-1பி விண்ணப்பங்களுக்கான கட்டணம் 1 லட்சம் டாலராக (ரூ.95 லட்சம்) அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இதற்கான அறிவிப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த கட்டணத்தை அமெரிக்க நிறுவனங்கள் செலுத்தினால் மட்டுமே வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடியும். இது இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க கனவை சிக்கலாக்கியது.

இதற்கிடையே, அதிபர் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா தலைமையில் 20 மாகாணங்கள் சார்பில் மசாசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் நேற்று அளித்த தீர்ப்பில் டிரம்பின் 1 லட்சம் டாலர் கட்டணத்தை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

டிரம்ப் அரசு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாகவும், குடியேற்ற கொள்கை மற்றும் வரிகளை நிர்ணயிப்பதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இந்த கட்டண உயர்வு அபகரித்ததாகவும் மனுதாரர்கள் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார். மேலும், இந்த 1 லட்சம் கட்டணம் எந்த வகையிலும் அதன் சாராம்சமும் அது செயல்படுத்தப்படும் விதமும் அது ஒரு வரி என்பதையே அடையாளப்படுத்துவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். இதன் மூலம் இனி அமெரிக்க நிறுவனங்கள் புதிய எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் கட்டணம் செலுத்த தேவையில்லை.

அடுத்தகட்டமாக, இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல் முறையீடு செய்யும் அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெறக் கூடும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எச்-1பி விசா ஆண்டுதோறும் 85,000 பேருக்கு வழங்கப்படும். இந்த விசாவை இந்திய ஐடி ஊழியர்கள் அதிகளவில் பெறுகின்றனர். 2026 ஆம் நிதியாண்டில், அமெரிக்காவில் பணிபுரிய எச்-1பி விசா கோரிய 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களின் விண்ணப்பங்களின் பரிசீலனையை விரைவுபடுத்த 1 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தி இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் முல்லின் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

* மேல்முறையீடு செய்யப்படும்
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எச்-1பி திட்டம் பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இறுதியாக அதை சரி செய்ய அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்தார். எனவே, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். இந்த உத்தரவு மேல்முறையீட்டில் ரத்து செய்யப்படும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.

* தீர்ப்பை வரவேற்ற இந்திய வம்சாவளிகள்
எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடையை அமெரிக்காவில் ஆளும் குடியரசு மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பிக்கள் என இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இனி எச்-1பி விசா மூலம் தொலைதூர மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்கு திறமையான ஆசியர்கள் கிடைப்பார்கள் என குடியரசு கட்சி எம்பி லிசா முர்கவுஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தொழில்நுட்பம், மருத்துவம், உயர் உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு அதிதிறன் வாய்ந்த உலக நிபுணர்களின் தேவை இருப்பதாகவும், இந்த தீர்ப்பின் மூலம் பெரும் சிக்கல் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் இந்தியா மற்றும் இந்திய வம்சாவளிகள் ஆய்வுகள் அறக்கட்டளையின் கொள்கை மற்றும் உத்தி துறை தலைவர் கான்டேராவ் காந்த் கூறி உள்ளார்.

* நாட்டிற்கு பெரும் பாதிப்பு அதிபர் டிரம்ப் கண்டனம்
நீதிமன்ற உத்தரவு குறித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘நீதிபதிகள் எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறார்கள். இது மிகவும் விசித்திரமானது. அவர்கள் நம் நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்’’ என்றார்.

Related Stories: