ஐநா தீவிரவாத பட்டியலில் பலுசிஸ்தான் விடுதலைப் படை; பாக்., சீனா முயற்சியை தடுத்தது அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை: பலுசிஸ்தான் விடுதலைப் படை (பிஎல்ஏ), மஜீத் பிரிகேட் ஆகியவற்றை சர்வதேச தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்க ஐநா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான், சீனா இணைந்து மேற்கொண்ட முயற்சியை அமெரிக்கா தடுத்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையின் ‘1267 அல்கொய்தா தடைகள் குழு’வின் கீழ், பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் தற்கொலைப் படையான மஜீத் பிரிகேட் ஆகிய அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்க பாகிஸ்தானும், சீனாவும் கடந்த ஆண்டு செப்டம்பரில் கூட்டு முன்மொழிவை சபையில் தாக்கல் செய்திருந்தன. இந்த அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான புகலிடங்களில் இருந்து செயல்படுவதாகவும், எல்லை தாண்டிய ஊடுருவல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி தூதர் ஆசிம் இப்திகார் அகமது கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த முயற்சியை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் அமைப்புகளுடன் இந்த அமைப்புகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்கா தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

இதற்கு முன், பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ‘1267 அல்கொய்தா தடைகள் குழு’வின் கீழ் தடை செய்ய இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த பல முன்மொழிவுகளை சீனா தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்துள்ளது. மேலும், பிஎல்ஏ, மஜீத் பிரிகேட் அமைப்புகளை அமெரிக்கா தனது தேசிய தீவிரவாத பட்டியலில் சேர்த்து வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: