மஸ்கட்: ஓமன் கடல் பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டு இருந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஈரான் போரால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி பதற்றமாக உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் சரக்கு கப்பல்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. ஓமன் கடல் பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற ‘மாரிவெக்’ சரக்கு கப்பல் மீது 2 தினங்களுக்கு முன்பு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், 21 மாலுமிகள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், 3 இந்திய மாலுமிகள் மாயமாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து ஓமனின் ‘டுகம்’ துறைமுகத்தை நோக்கிச் சென்ற ‘மாரிவெக்’ என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியில் இந்த கப்பல் சென்றபோது, அதன் எஞ்சின் அறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறை சேதமடைந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓமன் விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையினர், இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு மாலுமிகளைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் 3 இந்திய மாலுமிகளை காணவில்லை. இத்தகைய தாக்குதல்களை இந்திய வெளியுறவுத்துறை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், உடனடியாக இப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
