புழல்: வியாசர்பாடியை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மணிகண்டன் (29). இவர் கடந்த 5ம் தேதி இரவு சோழவரம் அடுத்த மாரம்பேடு பகுதியில் மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் உடலில் உள்காயங்களும், அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் செங்குன்றம் அடுத்த சிறுங்காவூர் பகுதியில் வீடு ஒன்றை கட்டி வரும் வியாசர்பாடியை சேர்ந்த செந்தில் (எ) டிங்கர் செந்தில்குமார் (44) உட்பட 3 மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், உருட்டுக்கட்டையால் அடித்ததில் மணிகண்டன் உயிரிழந்ததும், பின்னர் அவரது சடலத்தை சாலையோரம் வீசி விபத்தில் உயிரிழந்ததுபோல சித்தரித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி நண்பனை கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி செந்தில்குமாரை சோழவரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த விக்னேஷ் (31) என்பவரை நேற்று கைது செய்தனர்.
