பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் சடலம்; கணவரை கொடூரமாக கொன்ற வீடியோவை மீண்டும், மீண்டும் பார்த்து ரசித்த மனைவி: கள்ளக்காதலனுடன் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்

 

 

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது நடைமேடைவில் கடந்த 5ம் தேதி கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேசில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அந்த சடலத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாததால் உடலை ரயில்வே போலீசார் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில், 3 உதவி கமிஷனர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இறந்தவரின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு இருந்ததால் செவிலியர்கள், மருத்துவர்கள் யாராவது ஈடுபட்டு இருப்பார்களா என்று கருதிய போலீசார்,தனியார் மருத்துவமனை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மருத்துவமனைகளில் யாராவது கடந்த சில நாட்களாக காணாமல் போய் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் உடலில் ஷார்ட்ஸ் இருந்ததால் அந்த துணியை கண்காணித்தபோது அதில் பிராண்டட் துணிகளில் பயன்படுத்தப்படும் பார்கோடு இருந்தது. பார்கோடை வைத்து கொளத்தூர் பகுதியில் உள்ள பிரபல கடையில் எடுக்கப்பட்ட துணி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த பிராண்ட் துணியை 2 பேர் வாங்கியதும் அந்த துணியை வாங்கியவர்களின் தொலைபேசி எண்ணும் இருந்தது. அந்த நம்பர்களுக்கு போலீசார் தொடர்புகொண்டபோது ஒருவர் பேசியுள்ளார். மற்றொருவருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த செல்போன் எண்ணிற்கு சிடிஆர் போட்டு யார், யார் அந்த நம்பருடன் தொடர்பு கொண்டு உள்ளார்கள் என்று பார்த்தபோது ஒரு பெண் அதிகமாக அந்த நம்பரில் பேசியிருப்பது தெரியவந்தது. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நம்பரில் இருந்த வாட்ஸ் அப் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அந்த தொலைபேசி எண் லொகேஷனை பின்தொடர்ந்தபோது தேனாம்பேட்டை, தி.நகர் போன்ற இடங்களை காண்பித்தது. இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள பிரபல மருத்துவமனை அருகே சென்ற புளியந்தோப்புத் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் வாட்ஸ் அப்பில் அந்தப் பெண் வைத்திருந்த போட்டோவை காண்பித்து அங்குள்ள நபர்களிடம் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும் புற்றுநோய் நோயாளிகளுக்கு வீடு பிடித்துக்கொடுப்பது அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்துவந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளியை வைத்து அந்த பெண்ணிடம் எங்களுக்கு வீடு வேண்டும் உதவி வேண்டும் என்பது போல பேசவைத்தனர். அந்த பெண்ணும் வாட்ஸ்அப் காலில் பேசி நான் வருகிறேன் என நேற்று மதியம் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனை அருகே வந்துள்ளார். அப்போது சுற்றி இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இதன்பின்னர் அந்த பெண்ணை ரகசிய இடத்தில் வைத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோகிமா (36) என்பதும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ரோகிமாவின் கணவர் அமீர் அலி என்பது தெரியவந்தது.

ரோகிமாவுக்கு அசாம் மாநிலத்தில் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த ரோகிமா அமீர் அலியை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 2022ம் ஆண்டு முதல் ரோகிமா, அமீர் அலி ஆகியோர் தேனாம்பேட்டை தாமஸ் ரோடு பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு ஒன்றில் வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். அமீர் அலிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ரோகிமா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் ரோகிமாவுக்கு சென்னை தி.நகர் பகுதியில் வசித்துவரும் அஷ்ரப் (31) என்பவர் பழக்கமாகியுள்ளார். இவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

அங்கு காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். ரோகிமா அஷ்ரப்பிடம் தனது கணவர் அடிக்கடி தன்னை சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார். அதற்கு அஷ்ரப் அவனை விட்டுவிட்டு என்னுடன் வந்து விடு நாம் ஒன்றாக வாழலாம் என கூறியுள்ளார். அதற்கு ரோகிமா, ‘’அவனை விட்டு உன்னுடன் வந்தால் அவன் என்னை கொன்றுவிடுவான். எனவே, அவனை கொன்றுவிடலாம்’’ என்று கூறி கடந்த 3ம் தேதி இரவு அமீர் அலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவரை படுக்க வைத்துள்ளனர். பின்னர் அருவாமனையை எடுத்து அமீர் அலி கழுத்தை அறுத்து உடல் பாகங்களை தனித்தனியாக பிரித்து எடுத்து கை, கால்களை வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளனர்.

தலையை வெட்டி தனியாக பேக் செய்துள்ளனர். உடம்பை தனியாக தனியார் மருத்துவமனை கவரில் பேக் செய்து சூட்கேஸில் வைத்துள்ளனர். துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக அடிக்கடி வாசனை திரவங்களை தெளித்துள்ளனர். கடந்த 5ம் தேதி காலை 6 மணி அளவில் ரேபிடோ ஆட்டோ புக் செய்து உடலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். கை கால்கள் அடங்கிய பையை கால்வாயில் எரிந்துள்ளனர். தலையை செங்கல்பட்டு பகுதிக்கு சென்று புதைத்துள்ளனர். இவ்வாறு தெரியவந்தது. இதையடுத்து அஷ்ரப்பையும் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தலை உள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகளுடன் புதைக்கப்பட்ட தலையை இன்று மீட்டெடுக்கின்றனர். ரோகிமா, அஷ்ரப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஓட்டேரி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். முன்னதாக, கணவரின் தலை, கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோக்களாக பதிவு செய்துள்ளார்.

அத்துடன் கணவரின் உடல் அருகே சிரித்தப்படி நின்று வித, விதமாக செல்பி எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்களை அடிக்கடி போட்டு, போட்டு பார்த்து ரசித்துள்ளார். மேலும் இந்த காட்சிகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்தும் ரசித்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோக்களை கைப்பற்றி போலீசார், அதில் உள்ள காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த அளவுக்கு கொடூரமாக செயல்பட்டுள்ளார்.

கணவர் முகநூலில் பதிவு
கணவரை கொலை செய்த பின் ரோகிமா தனது செல்போனில் அவரது முகநூலில் சென்று தனக்கு வாழ பிடிக்கவில்லை, தன்னை யாரும் தேட வேண்டாம் என்ற ரீதியில் இந்தியில் அவரது கணவர் பதிவிட்டதுபோல பதிவிட்டுள்ளார். அவ்வாறு பதிவிட்டால் உறவினர்கள் யாரும் அவரை தேடமாட்டார்கள் மன உளைச்சலில் எங்கேயோ சென்றுவிட்டார் என நினைத்துக்கொள்வார்கள் என யோசித்து இவ்வாறு போலியாக பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories: