சென்னை: திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய போக்சோ வழக்கில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கயல்விழியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த, இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்து, மீண்டும் அதே சிறுமியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், அச்சிறுமி மீண்டும் கர்ப்பம் ஆனதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, கருக்கலைப்பு செய்ய திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயுடன் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா சென்றுள்ளார். அப்போது, ஸ்கேன் எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியதையடுத்து, ஸ்கேன் எடுக்க ஸ்கேன் சென்டருக்கு உள்ளே செல்லும்போது மதுமிதாவும் உள்ளே சென்றுள்ளார். ஆனால் அதற்கு மருத்துவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சிறுமி மட்டும் உள்ளே வர அனுமதித்துள்ளனர். உடன் வந்த மதுமிதாவை ஸ்கேன் சென்டருக்குள் அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த மதுமிதா அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவரை தகாத வார்த்தைகளில் பேசி, ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை முதல்வர் மோகன் காந்திடம் தெரிவித்துள்ளனர்.
அவரது உத்தரவின்பேரில் உதவி மருத்துவர் சிவகாமி சுந்தரி, இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, மதுமிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் வைத்தனர். இதனிடையே, ஏற்கனவே மதுமிதா ஆபாசமாக ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமாகி வந்தவர் என்பதும், கனகம்மாசத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது உள்பட 4 வழக்குகளில் சிறைக்கு சென்று வந்ததும், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமர்ந்து புகார் எழுதுவது போன்று ரீல்ஸ் வெளியிட்டு, அந்த ரீல்சில் `ஒருத்தனையும் விடமாட்டேன்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரீல்ஸ் வெளியிட்டுள்ள சம்பவமும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
