புழல்: புழல் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று, பார்ஹத் என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டு, முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகள், மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் தன்னுடைய 15 வயது மகளுக்கு 2வது கணவர் பார்ஹத் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை நேரில் பார்த்த பெண், இதுகுறித்து கணவனிடம் கேட்டபோது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து வெளியே தெரிவித்தால் உன் மகளை காரில் கடத்தி சென்று நாசம் செய்து விடுவோம் என 2வது கணவன் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டியுள்ளனர்.இதனால் அச்சமடைந்த பெண், இதுகுறித்து புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் கடந்த 4ம் தேதி போக்சோ, பெண்கள் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளில் 2வது கணவன் பார்ஹத், பிரியா, ஷாம்லி, ஜோசப் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், புகார் அளித்து 2 நாட்களாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை என்ற மன உளைச்சலில் சிறுமியின் தாய், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சென்னை கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பார்ஹத்தை நேற்று புழல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
