போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பது கடினம்: சர்ச்சையை கிளப்பிய போலீஸ் கமிஷனர் பதில்

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று அளித்த பேட்டி: சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியில் உதவி கமிஷனர் பரவாசுதேவன் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரகசியகண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுத்தெருவை சேர்ந்த மேகலா(48), ராசிபுரத்தை சேர்ந்த முகமது வதூத் ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை விற்பது வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 130 போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள், 6400 ஊசி மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதை மாத்திரை விற்பனையை சமீப காலமாக தான் அவர்கள் தொடங்கியுள்ளனர்.இவ்வாறு தெரிவித்தார். அப்போது, போதை பொருட்கள் பயன்பாடு தமிழகத்திலும், சேலம் மாநகரிலும் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கமிஷனர், ‘‘வெளிமாநிலங்களில் இருந்து தான், போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. அதனை கண்டுபிடித்து தடுப்பது கொஞ்சம் கடினமானது. ஆனாலும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம்,’’ என்றார். மாநகர போலீஸ் கமிஷனரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Related Stories: