சென்னை: தென்னிந்திய படவுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர், பிரகாஷ்ராஜ். பாஜ அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி பொதுச்செயலாளருமான நாகபாபு, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை ஆதரித்து பதிவு ஒன்றை ெவளியிட்டு இருந்தார். அதில், ‘ஒரு தலைவரின் வார்த்தையே இறுதியானது. அவரது பாதையில் சாத்தான்களையும், அரக்கர்களையும் யாரும் பார்த்தது இல்லை. அவருக்கு மட்டுமே எது சரி, எது தவறு என்பது தெரியும். உங்கள் சந்தேகங்களை நிறுத்துங்கள், உங்கள் நாவை அடக்குங்கள், கேள்வியின்றி தலைவரை பின்பற்றுங்கள்’ என்று பதிவிட்டு இருந்தார்.
உடனே இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பிரகாஷ்ராஜ், ‘உங்கள் சந்தேகங்களை நிறுத்துங்கள், நாவை அடக்குங்கள், கேள்வியின்றி தலைவரை பின்பற்றுங்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஆடுகள் அல்ல. பிழைப்பதற்காக அடிமைகளாக இருப்பவர்கள் அல்ல. இதுபோன்ற மிரட்டல்களை விடுக்காதீர்கள். கேள்வி கேட்பது எங்கள் உரிமை. எந்தவொரு தலைவருக்கும், தன்னை ஒரு தலைவர் என்று நினைப்பவருக்கும், பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. புரிகிறதா?’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
