திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நடைமுறையே தொடரும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

மதுரை: மதுரை விருந்தினர் மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம். பெரும்பாலான மக்கள் 2 ஆண்டுகளுக்கு முன் என்ன இருந்ததோ, அதே அமைதியான சூழல்தான் வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவே தொடர வேண்டும் என அரசு நினைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 ஆண்டுகளுக்கு முன் என்ன சூழல் இருந்ததோ, அதே முந்தைய நிலை தொடர வேண்டுமென அனைவரும் நினைக்கிறோம். எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்.

முதலமைச்சர், செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நடைமுறையே கிடையாது. முதல்வர், மக்களை தினசரி சந்திக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து தான் அரசியல் நடத்த வேண்டும் என்று இல்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். எடப்பாடி பாஜவில் இணைந்து விடுவார்: எடப்பாடி பழனிசாமி பதவிக்காக அதிமுகவை, பாஜவில் இணைத்து விடுவார். ஒரு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்தால் பாஜவில் இணைந்து விடுவார். கட்சியை அவரது சுயலாபத்திற்கானதாக எடப்பாடி மாற்றிவிட்டார். இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சருக்காக அதிகாரிகள் காத்திருப்பு
அமைச்சர் நிர்மல்குமார், மதுரை விருந்தினர் மாளிகையில் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் அங்கு கட்சியினர் அதிகளவில் கூடியதால், அவர்களை சந்திக்க சென்றுவிட்டார். இதனால், ஆய்வுக் கூட்டத்தை முடித்து வெளியில் வந்த கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சருக்காக அரை மணிநேரத்திற்கும் மேலாக மரத்தடியில் காத்திருந்தனர். அமைச்சர் வந்ததும் அனைவரும் கிளம்பி சென்றனர்.

‘எய்ம்ஸ் கட்டும் நேரத்தில் அணையே கட்டியிருக்கலாம்’
அவனியாபுரத்தில் மாலையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், ‘‘மதுரை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகி வருகிறது. தேவையான நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீர்ப்பிடிப்பு இடங்களை எடுக்கும் போது மறு சீரமைப்பு செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களை ராமநாதபுரத்தில் இருந்து இங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்பது வருடமாக எய்ம்ஸ் கட்டப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு அணையைக் கூட கட்டியிருக்கலாம். விரைவில் அதற்கான பணிகளை முடித்து எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்.

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் ஒன்றிய அரசு மீதுள்ள வெறுப்பு மற்றும் அதிருப்தியை காட்டுகிறது. நீட் கொண்டு வரப்பட்டதற்கு எதிராகவும் போராட்டம் நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளாக டிஜிட்டல் என கூறும் ஒன்றிய அரசு, காதில் தோட்டை கூட கழட்ட சொல்லும் தேர்வில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தால் இதற்கு மேல் வெட்கக்கேடு எதுவும் இல்லை’’ என்றார்.

Related Stories: