நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க 11ம் தேதி முதல்வர் விஜய் டெல்லி பயணம்

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகிற 11ம் தேதி முதல்வர் விஜய் மீண்டும் டெல்லி செல்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், மே 27ம் தேதி டெல்லி சென்று வந்தார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு, மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சந்திப்பை மேற்கொள்ளாமல் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் மாநில முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் டெல்லியில் வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், 11ம் தேதி டெல்லி செல்கிறார். இந்த பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories: