அரசுப் பள்ளியில் மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லா சீருடைகள், தரமற்ற புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் வழங்கல்! தரமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

 

அரசுப் பள்ளியில் மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லா சீருடைகள், தரமற்ற புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் வழங்கியுள்ளனர். தரமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஏழை, எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளே இவையனைத்தும் மாணவர்களின் கைகளில் கிடைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தற்பொழுது வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு ஆகியவை மிகவும் மோசமான நிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அரசு வழங்கும் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து, சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தகப் பைகள் ஆகியவை மிக மோசமான தரத்திலும், தவறான அளவுகளிலும் உள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லாமல், ஏற்ற இறக்கங்களுடனும், அளவுகள் மாறியும் சீருடைகள் உள்ளன. ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் ‘ஏனோ தானோ’ என்ற மனோபாவத்துடன் தரமற்ற துணிகளையும், புத்தகப் பைகளையும் வழங்குவதால் அவை சில மாதங்கள்கூடத் தாங்குவதில்லை. “அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்” என்ற அதிகாரிகளின் அலட்சியப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் நலன் காக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, சீருடைகளைத் தைக்கும் பணியைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாக வழங்கக் கூடாது.

மாறாக, கோடை விடுமுறைக்கு முன்பாகவே மாணவர்களிடம் சரியான அளவுகளை எடுத்து, அந்தந்தப் பள்ளிகளைச் சுற்றியுள்ள உள்ளூர் தையல்காரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதற்கான தரமான துணிகளை அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்குச் சரியான அளவில் சீருடைகள் கிடைப்பதுடன், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் பெருமளவில் உறுதி செய்யப்படும்.

அதேபோல், புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் அளவு மற்றும் தரத்தை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும். தரம் குறைந்த அல்லது அளவில் குறைபாடுள்ள பொருட்களை, ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களிடமே உடனடியாகத் திருப்பி அனுப்பி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் வகையில் தரமற்ற பொருட்களை வழங்குவதை நிறுத்தி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அவர்களும் பெருமிதத்துடன் பள்ளிக்குச் செல்லும் வகையில் தரமான கல்வி உபகரணங்களை வழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்கள், ஏழை மாணவர்களின் கல்விச் சூழலோடு விளையாடும் இந்த முறைகேடுகளைக் களைந்து, இந்த நிதியாண்டிலேயே உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: