மெட்ரோ ரயில் 5வது வழித்தடத்திற்கான யு வடிவ கான்கிரீட் பாலம் தயாரிப்பு பணிகள் நிறைவு: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை, ஜூன் 6: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட வழித்தடம் 5ல் கடைசி ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது ஆலோசகரான ஏஇஓஎன் மற்றும் ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து, வழித்தடம் 5ல் ஆதம்பாக்கம் மெட்ரோ நிலையப் பணிகளுக்காக, 19.5 மீட்டர் நீளமுள்ள கடைசி ‘யு’ கிரண்டர் (மெட்ரோ ரயில் பாதையை தாங்கி நிற்கும் பிரமாண்ட ‘U’ வடிவ கான்கிரீட் பாலம்) தயாரிக்கும் பணி, அதன் பிரத்யேக கட்டுமானப் பணிமனையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிக பிரமாண்டமான பணிகளில் ஒன்றான, மொத்தம் 824 ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தயாரிக்கும் மிகப்பெரிய இலக்கு முழுமையாக எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தயாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

43 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த 5வது வழித்தடத்திற்கான உற்பத்தி தளம், சென்னை மெட்ரோவின் 2ம் கட்ட திட்டத்திலேயே மிகவும் விறுவிறுப்பாகவும், அதிக அளவிலும் கட்டுமானப் பொருட்களை தயாரிக்கும் ஒரு முக்கிய தளமாக விளங்கி வருகிறது. வழித்தடம் 5ல் அமைய இருக்கும் 13.1 கி.மீ. நீள உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களின் கட்டுமானத்திற்கு தேவையான பிரமாண்டமான கான்கிரீட் பாகங்களை தயாரிப்பதற்காக, இந்த தளம் திட்டமிடப்பட்டு 6 பிரத்யேக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 5,836 கட்டுமானப் பொருட்கள் முன்கூட்டியே தயாரிக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 1.2 லட்சம் கன மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்படுவதுடன், இதன் மொத்த எடை கிட்டத்தட்ட 3 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.

இந்த தளத்தில் 302 தூணின் மேல் பகுதி, 1465 தூணின் பக்கவாட்டு பகுதி, 824 ‘யு’ வடிவ தாங்கு பாலங்கள், 2055 ‘ஐ’ வடிவ தாங்கு பாலங்கள், 194 ‘டி’ வடிவ தாங்கு பாலங்கள், 68 போர்டல் யூ-வடிவ அமைப்புகள் மற்றும் 1079 பாதுகாப்பு கைப்பிடி சுவர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரமாண்டமான இந்த அனைத்துப் பொருட்களும், அவை தயாரிக்கப்படும் உற்பத்தி தளத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுவே இந்த திட்டத்தின் பிரமாண்டத்திற்கும், அதன் சவாலான தொழில்நுட்பத்திற்கும் மிகச்சிறந்த சான்றாகும். இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய சாதனை, ஹைட்ராலிக் அமைப்புகளுடன் கூடிய தானியங்கி ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது ஆகும். இந்தியாவில் ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தயாரிப்பில் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த புதிய முறையின் மூலம், பணிகள் அனைத்தும் கணினி கட்டுப்பாட்டு கருவி வழியாக தானியங்கி மயமாக்கப்பட்டன. இதனால் பணியிட பாதுகாப்பு மற்றும் கட்டுமான தரம் அதிகரித்ததோடு, வேலை நேரமும் கணிசமாக குறைந்தது.

இந்த திட்டத்தில், மிகச்சிறிய அளவிலான 8.9 மீ நீளமுள்ள ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் முதல், இந்தியாவின் மிக நீளமான 33.33 மீ நீளமுள்ள ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் வரை தயாரிக்கப்பட்டுள்ளன. 225 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த மாபெரும் யூ வடிவ கான்கிரீட் பாலம் தயாரித்தது, எங்களது குழுவின் பொறியியல் திறமைக்கும், வடிவமைப்பு நுணுக்கத்திற்கும், சவாலான பணிகளை விரைந்து முடிக்கும் ஆற்றலுக்கும் சான்றாகும். எவ்வித தொழில்நுட்பக் குறைபாடுகளும் இன்றி, இந்த தயாரிப்பு பணி மிக வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இந்திய மெட்ரோ ரயில் கட்டுமான வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: