சென்னை, ஜூன் 4: சென்னை குடிநீர் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், நாளொன்றுக்கு சுமார் 1250 எம்.எல்.டி வரை பாதுகாப்பான குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களான பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலமும் நெம்மேலியில் உள்ள 110, 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரின் நீண்ட கால குடிநீர்த் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, குடிநீர் வழங்கல் பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், 9 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 143 குடிநீர் பகிர்மான குடிநீர் நிலையங்களின் மூலம் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதினை தினந்தோறும் கள அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் தொடர்பான பெறக்கூடிய கோரிக்கைகள் மற்றும் புகார்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அவ்வாறு தெரிவிக்கபட்ட புகார்கள், கோரிக்கைகள் சரி செய்யப்படுவதை கள அலுவலர்கள் கண்டிப்பாக களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களும் பொது மக்களிடம் கனிவோடு பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். மேலும், கழிவுநீர் கட்டமைப்புகளில் தூர்வாரும் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கழிவுநீரகற்றும் இயந்திரங்களை கொண்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடிநீர் வழங்கல் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும். சாலைகள் மற்றும் தெருக்களில் பழுதாகி உடைந்துள்ள இயந்திர நுழைவாயில் மூடிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்களை உடனடியாக சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் புகார்கள் தெரிவிப்பதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், நிதி இயக்குநர் எம்.ஸ்ரீநிவாச ராகவன், பொறியியல் இயக்குநர் உ.பர்வீஸ், பொது மேலாளர் மு.ஷேக் மன்சூர், தலைமைப் பொறியாளர்கள் ஜ.சுகந்தி, ஏ.ராதாகிருஷ்ணன், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
