பயிற்சி பெற்ற ராணுவ விமானி காதலிக்கு ஹெலிகாப்டர் முன் மோதிரம் அணிவித்து ஆரவாரம்: நாசிக் பயிற்சி பள்ளி வீடியோ வைரல்

 

நாசிக்: ராணுவ பயிற்சி முடித்த விமானி தனது காதலிக்கு ஹெலிகாப்டர் முன்பு மோதிரம் அணிவித்து திருமண விருப்பம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் இளம் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல ஆண்டுகால கடினப் பயிற்சியை முடித்த இளம் வீரர்கள், முறைப்படி ராணுவ விமானிகளாக தங்களது பணியைத் தொடங்கத் தயாராக இருந்தனர். இந்த விழாவில் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் திரளாகப் பங்கேற்ற நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இளம் வீரர்களின் சாதனை மற்றும் தேச சேவையை பறைசாற்றும் விதமாக ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், பயிற்சியை முடித்த இளம் விமானி பாரத் பரத்வாஜ், தனது காதலி ஆருஷியை அங்கிருந்த ஹெலிகாப்டர் அருகே அழைத்துச் சென்றார். அங்கிருந்தவர்கள் வியக்கும் வண்ணம் திடீரென ஒரு காலில் மண்டியிட்டு ஆருஷியிடம் மோதிரத்தை நீட்டி ‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா’ என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார். எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியால் உறைந்து போன ஆருஷி, உடனடியாக சம்மதம் தெரிவித்ததால் அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். தனது தொழில்முறை வெற்றியின் அடையாளமான ஹெலிகாப்டர் முன்பாகவே தனது வாழ்வின் புதிய பயணத்தைத் தொடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: