10 ஆண்டுகளுக்கு பிறகு குட்டு அம்பலம்; சினிமா தயாரிப்பாளர் மீது பலாத்கார புகார் கூறியது பொய்: பணத்திற்கு செய்ததாக நடிகை பகீர் வாக்குமூலம்

 

மும்பை: பிரபல சீரியல் நடிகை ஷில்பா ஷிண்டே தனது கடந்த கால பொய் புகார் குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ‘பாபிஜி கர் பர் ஹேன்’ என்ற சீரியல் கடந்த 2016ம் ஆண்டில் மிகவும் பிரபலமாக இருந்தபோது, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷில்பா ஷிண்டே (46) திடீரென அதிலிருந்து விலகினார். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது பாலியல் பலாத்கார புகார் அளித்ததோடு, தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அந்த சீரியலின் தயாரிப்பாளர்களுக்கும் இவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடந்து வந்த நிலையில், இரு தரப்பினரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் சமரசம் செய்துகொண்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி சிங் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய ஷில்பா ஷிண்டே, ‘சஞ்சய் கோலி மீது நான் அளித்த பாலியல் பலாத்கார புகார் முற்றிலும் பொய்யானது; அந்த நேரத்தில் எனக்கு வேறு வழி தெரியாததாலும், யாரும் ஆதரவு அளிக்காததாலும் பணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது’ என்று முதல்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

மேலும் தன்னிடம் சட்டப் படிப்பு பின்னணி இருந்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்ய கடுமையான குற்றச்சாட்டுகளை எழுதச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பழைய மனக்கசப்புகளை மறந்து அதே தயாரிப்பு குழுவுடன் அவர் மீண்டும் சுமூகமான முறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: