நியூயார்க்: தனது அடுத்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரட் கோல்ட்ஸ்டைனுடனான காதல் குறித்த கேள்விக்கு ஜெனிபர் லோபஸ் அதிரடியாக பதிலளித்துள்ளார். புகழ்பெற்ற அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான ஜெனிபர் லோபஸ் (55), கடந்த 2022ம் ஆண்டு நடிகர் பென் அப்லெக்கை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு முன்னதாக கடந்த 1999ம் ஆண்டு தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய ஜெனிபர், காதல் மற்றும் உறவுகள் குறித்து பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சமீபத்தில் லாஸ் வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பேசுகையில், ‘எனது அன்பைப் பெற வேண்டுமானால் அதற்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்’ என்று அதிகாரத்துடன் குறிப்பிட்டு தனது விவாகரத்து பாதிப்பிலிருந்து மீண்டு வருவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், ‘ஆபீஸ் ரொமான்ஸ்’ என்ற திரைப்படத்தில் ஜெனிபர் லோபஸுடன் இணைந்து நடித்துள்ள பிரட் கோல்ட்ஸ்டைனுக்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘டுடே’ நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெனிபர் லோபஸ், ‘யாராவது ஒருவருடன் இணைந்து பணிபுரிந்தாலே அவர்களுடன் என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாகிவிட்டது; இது முற்றிலும் உண்மைக்கு மாறானது’ என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்பதை இருவரும் ஒருமனதாகத் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் இணைந்து நாடகம் ஒன்றைப் பார்க்கச் சென்றதில் இருந்தே இந்த வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
